Tuesday, September 22, 2009

புகை !

புகை போய் ஒரு பகையா?
மலையைப் பாருங்கள்
வானைப் பாருங்கள்
காலைப் பனியைப் பாருங்கள்
சர்ச்சிலின் சுருட்டைப் பாருங்கள் !

புகை விடாத விமானமா
புகை விடாத ரயிலா
புகை விடாத பேருந்தா
புகை விடாத இரு சக்கர வாகனமா
புழுதிப்புகை நமக்குத் தெரியவில்லை?

வாகனங்கள் மோதுகையில்
வானை நோக்கிப் போகவில்லை புகை
ஆலையில் இல்லையா புகை?
தொழிற்சாலையில் இல்லையா புகை?
அணுமின் உலையில் அனலாய் வரவில்லையா புகை?

அன்றாடம் நாம் அருந்திட வரவில்லை புகை
அடுப்பு புகையவில்லை என்றால், நாம்
அகம் புகைத்திடும் வகை

இதமாகக் குடிப்பதிலும் புகை
இதமாகக் குளிப்பதிலும் புகை
பிணமாகிவிட்டால் அருகே வத்திகளின் புகை
சுடுகாட்டில் வேகுகையில் புகை

பகை நடுவிலே பரமனிருக்கிறான்
புகை நடுவிலே புனிதனிருக்கிறான்
அதற்காக,நீங்கள் புகை பிடிக்க வேண்டாம் !

சமத்துவபுரம்

என் உறுப்புகளைக்
கறையான்களுக்கும்
புழுக்களுக்கும் தானம் செய்து
தியாகியாகிக் கொண்டிருந்தேன்!

திடீரென்று ஒரு கூட்டம் வந்தது.
என் தலைமாட்டில்
ஓர் அரசியல்வாதியைப் புதைத்தனர்
நான், "வேண்டாம்" என்றேன்; கேட்கவில்லை
புதைத்துச் சென்றுவிட்டனர் அவர்கள்!

திடீரென்று இன்னொரு கூட்டம் வந்தது
ஒரு கள்வனைப் புதைத்தது அக்கூட்டம்
"வேண்டாம், என்னருகே ஒரு கள்வனா?
நான் நல்லவன்" என்றேன்!
கேட்கவில்லை அவர்கள், புதைத்துச் சென்றனர்!

இப்படியே
ஒரு பொய்யனை, ஒரு பொறாமைக்காரனை,
ஒரு ஊழல் செய்பவனை, ஒரு வன்முறையாளனை,
ஒரு முன்கோபியை என்னைச் சுற்றி புதைத்தனர்!

ஒருநாள் ஒரு விபச்சாரியை
என் பக்கத்தில் புதைக்க வந்தனர்
நான் கத்தினேன், கதறினேன்
"கற்புக்கரசன் என்னருகே வேசியா?" என்று

பூமாதேவியிடம் நியாயம் கேட்டேன்
பொறுமையாய் அவள் சொன்னாள்;
"பொறூமையாயிருப்பா, நீதான் பிணமாயிற்றே!"

Monday, September 7, 2009

வெட்டப்படுவது மரங்கள், வீழ்த்தப்படுவதோ மனிதர்கள்!

ஒருவன் மரம் வெட்டினான்
கோடி கோடியாய்க் கொள்ளையடித்தான்.

அவன் மகனும் மரம் வெட்டினான்
அவனும் கோடி கோடியாய்க் கொள்ளையடித்தான்.

இப்போதெல்லாம் மக்களாகிய
எங்களுக்க்குக்
கன்று நடவே பயமாயிருக்கிறது
எவன் வந்து வெட்டுவனோ !?
என்று.

##############&&&&&&&&&&&&&&&&&&&#####################


மரங்கள் இல்லாததால்
மண்ணை முத்தமிட
மேகங்கள் சண்டையிட்டுக் கொண்டன.


கிளைகள் இல்லாததால்
கோதி விளையாடக்
காற்று புழுங்கிக் கொண்டிருந்தது.


கூடுகள் கட்ட முடியாததால்
பறவைகள் எல்லாம்
புலம்பிக் கொண்டிருந்தன.


தாவுவதற்கில்லாமல்
மந்திகள் எல்லாம்
தவித்துக் கொண்டிருந்தன.


கொத்தித் தின்ன முடியாமல்
மரங்கொத்திகள் எல்லாம்
ஏமாந்து கொண்டிருந்தன.


விலைவாசி வெய்யிலால்
மக்கள் எல்லாம்
வெதும்பிக் கொண்டிருந்தனர்.


அனைத்தும் நீதிமன்றம் போனது
தீர்ப்பும் வந்தது
"மரங்கள் வெட்டப்பட்டதால் இந்த வேதனை,
இனி
மரத்தை வெட்டுபவனை
விளக்கு மரத்தில் கட்டி அவமானப்படுத்துங்கள்" என்று..

Saturday, August 29, 2009

பதிவுலகில் என் முதல் கவிதை..

பள்ளிக்கூடம் போகிறபோது தான்
ஓரளவு தெரிகிறது பெற்றோர்கள் அருமை

கல்வி முடிக்கிற போது தான்
ஓரளவு தெரிகிறது ஆசிரியர்கள் அருமை

பணியில் ஈடுபடுகிற போது தான்
ஓரளவு தெரிகிறது பணத்தின் அருமை

பலரிடம் பழகுகிற போதுதான்
ஓரளவு தெரிகிறது நட்பின் அருமை

திருமணம் புரிகிற போதுதான்
ஓரளவு தெரிகிறது இருவரின் அருமை

புன்னகை சிந்துகிற போதுதான்
ஓரளவு தெரிகிறது இன்பத்தின் அருமை

கண்ணீர் வழிகிற போது தான்
ஓரளவு தெரிகிறது சோகத்தின் அருமை

மழலையைப்பெறும்போது தான்
ஓரளவு தெரிகிறது படைப்பின் அருமை

கூர்ந்து பார்க்கிற போது தான்
ஓரளவு தெரிகிறது இயற்கையின் அருமை

முதுமையை நெருங்குகிற போதுதான்
ஓரளவு தெரிகிறது இளமையின் அருமை

வாழ்ந்து முடிகிற போதுதான்
ஓரளவு தெரிகிறது வாழ்வின் அருமை !