Tuesday, September 22, 2009

சமத்துவபுரம்

என் உறுப்புகளைக்
கறையான்களுக்கும்
புழுக்களுக்கும் தானம் செய்து
தியாகியாகிக் கொண்டிருந்தேன்!

திடீரென்று ஒரு கூட்டம் வந்தது.
என் தலைமாட்டில்
ஓர் அரசியல்வாதியைப் புதைத்தனர்
நான், "வேண்டாம்" என்றேன்; கேட்கவில்லை
புதைத்துச் சென்றுவிட்டனர் அவர்கள்!

திடீரென்று இன்னொரு கூட்டம் வந்தது
ஒரு கள்வனைப் புதைத்தது அக்கூட்டம்
"வேண்டாம், என்னருகே ஒரு கள்வனா?
நான் நல்லவன்" என்றேன்!
கேட்கவில்லை அவர்கள், புதைத்துச் சென்றனர்!

இப்படியே
ஒரு பொய்யனை, ஒரு பொறாமைக்காரனை,
ஒரு ஊழல் செய்பவனை, ஒரு வன்முறையாளனை,
ஒரு முன்கோபியை என்னைச் சுற்றி புதைத்தனர்!

ஒருநாள் ஒரு விபச்சாரியை
என் பக்கத்தில் புதைக்க வந்தனர்
நான் கத்தினேன், கதறினேன்
"கற்புக்கரசன் என்னருகே வேசியா?" என்று

பூமாதேவியிடம் நியாயம் கேட்டேன்
பொறுமையாய் அவள் சொன்னாள்;
"பொறூமையாயிருப்பா, நீதான் பிணமாயிற்றே!"

No comments:

Post a Comment